மாற்றங்களுக்கு ஏற்றபடி தகுதிப்படுத்திக்கொள்வது காலத்தின் தேவை. நகர்ப்புறங்களில் வசிக்கும் வசதியான குடும்பத்துப் பிள்ளைகளுக்கு இதற்காகக் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். அடித்தட்டுக் குடும்பங்களில் இருந்தும், கிராமப்புற அரசுப் பள்ளிகளில் படித்துவிட்டும் வரும் முதல் தலைமுறை மாணவர்களுக்கு இந்த வாய்ப்புகள் அமைவதில்லை. உயர்கல்விக்கான வாசலை இவர்களுக்காகத் திறந்துவிடும்போது, இந்த வாய்ப்புகளையும் சேர்த்துத் தருவதே முழுமையான வழிகாட்டுதலாக இருக்கும். இதைத்தான் பயிற்சிப் பட்டறைகள் மூலம் அகரம் பவுண்டேஷன் தருகிறது.
கிராமங்களிலிருந்து கல்வி வெளிச்சம் தேடி வரும் மாணவர்களுக்கு கல்வியைப் பெற புத்தகங்கள் வழிகாட்டுகின்றன. சமூகத்தைப் புரிந்துகொள்ளவும், தன்னை அறியவும், வாழ்க்கைமுறை மாற்றங்களுக்குப் பழகவும், வேலைவாய்ப்புகளுக்கு ஏற்றபடி தங்களைத் தகுதிப்படுத்திக்கொள்ளவும் அவர்களுக்கு வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. இந்த நூல் நிச்சயம் அதற்கு உதவும்.